

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி அதில் முதல் நாடாக நெதர்லாந்து சென்றார். தலைநகர் தி ஹேக்கில் அந்த நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை நேற்று முன் தினம் இரவில் சந்தித்து பேசினார்.அப்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாட்டு உறவுகளை ஒரு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு இரு தலைவர்களும் உயர்த்தினர்.
இதைத்தவிர பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். குறிப்பாக உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடலால் எழுந்துள்ள எரிசக்தி வினியோக தடை உள்ளிட்ட பிரச்சினை கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நெதர்லாந்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஸ்வீடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிரான்ட் கிராஸ்" எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.இத்துடன், பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நார்வே சென்றார். சுமார் 43 ஆண்டுகளில் முதல்முறையாக நார்வேக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா -நார்வே மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். எரிசக்தி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி கலந்து ஆலோசிக்க உள்ளார்.