அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு தனித்துவம் வாய்ந்த அன்பளிப்பு வழங்கிய பிரதமர் மோடி

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் மாநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனித்துவம் வாய்ந்த அன்பளிப்புகளை வழங்கியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு தனித்துவம் வாய்ந்த அன்பளிப்பு வழங்கிய பிரதமர் மோடி
Published on

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.

நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.

அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேதந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் மாநாட்டு தலைவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த பரிசுகளை வழங்கினார்.

அவற்றில், கமலா ஹாரிசின் தாத்தாவான பி.வி. கோபாலன் உடன் தொடர்புடைய மரத்தினால் உருவான கைவினை பொருள் ஒன்றை வழங்கினார். கோபாலன் மூத்த அரசு அதிகாரி ஆவார். அவர் பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார்.

இதேபோன்று கமலா ஹாரிசுக்கு, குலாபி மீனாகரி செஸ் விளையாட்டுக்கான அன்பளிப்பு ஒன்றையும் பிரதமர் மோடி வழங்கினார். இந்த செஸ் பெட்டியானது, உலகின் மிக பழமையான காசி நகருடன் நெருங்கிய தொடர்புடையது. பிரதமர் மோடியின் தொகுதியை சேர்ந்தது ஆகும்.

இந்த செஸ் விளையாட்டுக்கான பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளும் (செஸ் காய்கள்) கைவினை பொருட்கள் வகையை சேர்ந்தது. அவற்றின் வண்ணங்கள் காசி நகரின் பெருமையை பிரதிபலிப்பவை.

இதேபோன்று, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு வெள்ளியால் ஆன குலாபி மீனாகரி கப்பல் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார். இந்த பரிசு பொருளும் தனித்துவம் வாய்ந்த கைவினை பொருள் ஆகும். இதன் வண்ணங்களும் காசி நகரின் பன்முக தன்மையை பிரதிபலிப்பவை ஆகும்.

ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு சந்தனத்தில் உருவான புத்தர் சிலை ஒன்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com