

புதுடெல்லி,
இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான பின்லாந்து, நீண்ட காலமாக இந்தியாவுடன் விஞ்ஞானம், வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
பின்லாந்தைச் சேர்ந்த சுமார் 100 நிறுவனங்கள் இந்தியாவில் தொலைத்தொடர்பு, லிஃப்ட், இயந்திரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன. அதே போல சுமார் 30 இந்திய நிறுவனங்கள் பின்லாந்தில் தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுகின்றன.
இந்த நிலையில், இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ஆகிய இருவர் இடையிலான உரையாடல் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
இதில் பேசிய பின்லாந்து பிரதமர் சன்னா மரின், தற்போது அனைத்து உலக நாட்டுத் தலைவர்களின் நிரல்களிலும் முதல் செயல்திட்டமாக இருப்பது கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தான். அந்த வகையில் இந்திய அரசின் தடுப்பூசி திட்டங்கள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா தொற்று காலத்தில், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை அனுப்பியுள்ளோம். சமீபத்திய வாரங்களில், சுமார் 70 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 58 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகளைப் பெற்றுள்ளன.
சி.டி.ஆர்.ஐ.(பேரழிவை தடுக்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணி) மற்றும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி ஆகியவற்றில் பின்லாந்து இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சர்வதேச நிறுவனங்கள் பின்லாந்தின் நிபுணத்துவத்தால் பயனடையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.