செஷல்ஸ் நாட்டில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
செஷல்ஸ் நாட்டில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Published on

விக்டோரியா,

செஷல்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மாஹே தீவில் உள்ள புகழ் பெற்ற நவசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

செஷல்ஸ் தேசிய தினம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் 29-ந்தேதி(இன்று) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு

இதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். விமானம் மூலம் செஷல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார்.

நாடாளுமன்றத்தில் உரை

தொடர்ந்து நேற்றைய தினம் செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு, செஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.

உயரிய விருது

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்' என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியினர்

செஷல்ஸ் நாட்டில் உள்ள விக்டோரியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களோடு கலந்துரையாடி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நவசக்தி விநாயகர் கோவில்

இந்நிலையில் இன்று மாஹே தீவில் உள்ள புகழ் பெற்ற நவசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 1992-ம் ஆண்டு செஷல்ஸ் இந்து கோவில் சங்கத்தால் கட்டப்பட்ட இந்த கோவில் செஷல்ஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரே தமிழ் இந்து கோவில் ஆகும்.

இந்த கோவிலில் இன்று நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து செஷல்ஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இன்று நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com