

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30ந்தேதி பதவி ஏற்றது. 2வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு மேற்கொள்ள முடிவு செய்தார்.
இந்த பயணத்திற்கு முன் அவர் வெளியிட்ட செய்தியில், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இதன்படி, மோடி நேற்று மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருதை அந்த நாட்டின் அதிபர் வழங்கினார்.
இதனை அடுத்து பிரதமர் மோடி இலங்கை நாட்டுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்பில் 11 இந்தியர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின் முதல் வெளிநாட்டு தலைவராக மோடி அங்கு செல்கிறார்.
இதன்படி அவர் காலை 11 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்கிறார். அவரை இலங்கை அதிபர் சிறிசேனா வரவேற்கிறார். பின்னர் மோடிக்கு காலை உணவு வழங்குகிறார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதன்பின் 12 மணியளவில் அதிபரின் செயலகத்தில் மோடிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. 12.25 மணியளவில் அதிபர் இல்லத்தில் மரக்கன்று நடப்படுகிறது. அதிபர் சிறிசேனாவுடன் மோடி சந்தித்து பேசுகிறார். மதியம் 12.40 மணியளவில் அதிபருடன் பிரதமர் மோடி மதிய உணவு எடுத்து கொள்கிறார்.
இதனை அடுத்து 1.35 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான குழு, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறது. பின்னர் 2.05 மணியளவில் பொதுமக்களுடன் மோடி உரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின் 3 மணியளவில் அவர் இலங்கையில் இருந்து நாடு திரும்புகிறார்.
இலங்கைக்கு பிரதமர் மோடி வருகை தருவதனை முன்னிட்டு அந்நாட்டு போலீசார், போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவான அளவில் எடுத்து உள்ளனர்.