‘பிரதமர் மோடியின் வருகை ஒரு மைல்கல் தருணம்’ - இஸ்ரேல் ஊடகங்கள் புகழாரம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

ஜெருசலேம்,

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக்கையும் நேரில் சந்தித்து பேச உள்ளார்.

இதற்கிடையில், பிரதமர் மோடியின் வருகை குறித்து இஸ்ரேல் நாட்டில் உள்ள முன்னணி பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்களில் வெளியாகியுள்ள செய்திகளில், ‘இது ஒரு மைல்கல் தருணம்’ என்றும், ‘பிரதமர் மோடியின் வருகை ஒரு மூலோபாய சீரமைப்பு, இந்தியா-இஸ்ரேல் உறவுகளை புதிய முறையில் சீரமைக்கும் நடவடிக்கை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை மையாகக் கொண்டு கிரீஸ், சைப்ரஸ், சில அரபு நாடுகள் உள்பட பிற நாடுகளுடன் இணைந்து ஒரு ‘அறுகோண கூட்டணி’ உருவாக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார். இந்த சூழலில், பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இதனை அந்நாட்டு ஊடகங்கள் ‘வரலாற்று சிறப்புமிக்க தருணம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளன.

முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சேர்ந்து, பிரதமர் மோடியுன் கடற்கரையில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இஸ்ரேல் நாடாளுமன்றம் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டிருந்த புகைப்படத்தை பெஞ்சமின் நெதன்யாகு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) திட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இஸ்ரேலிய ஊடகங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அதே சமயம், இஸ்ரேலில் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும் அங்குள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியாவை பற்றிய அணுகுமுறையில் ஒற்றுமையாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com