‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்’ இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்

இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்’ இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் பிரபலமான மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மெயில் ஆன் சண்டே நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டதாக அந்த பத்திரிகை நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மெயில் ஆன் சண்டே இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. கடிதத்தை வெளியிட்டதில் எந்த தவறும் புரியவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், கோர்ட்டில் இந்த வழக்கை தற்காத்து வாதாட தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இதற்கிடையில் இளவரசர் ஹாரி, தனியார் பத்திரிகையின் இந்த செயல் எனது மனைவிக்கு எதிரான ஈவுஇரக்கமற்ற நடவடிக்கை என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களின் பெரும் தொல்லையினாலேயே தனது தாயாரும், இளவரசியுமான டயானா பாதிக்கப்பட்டதாகவும், அதே போன்று வரலாறு மீண்டும் திரும்பிவிடுமோ என்பதே தனது மிகப்பெரிய அச்சம் என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், அப்போது எனது தாயாரை இழந்தேன். இப்போது அதே சக்திகளால் எனது மனைவி பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்கிறேன் என வருத்தத்துடன் கூறினார்.

இளவரசி டயானா வாழ்ந்த காலத்தில், அவரை புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் அவரை பின்தொடர்ந்தது அவருக்கு பெரும் தொந்தரவாக அமைந்தது. 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இளவரசி டயானா தனது காதலர் டோடி பயத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, புகைப்பட கலைஞர்கள் அவரது காரை விரட்டி சென்றதால் விபத்துக்குள்ளாகி டயானா உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com