இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு

இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.
இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு
Published on

கொழும்பு,

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அவற்றில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இலங்கை முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு தேச பாதுகாப்பு தொடர்பான இலங்கை நாடாளுமன்ற குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்குழு, தனது ஆய்வை முடித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில், அக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவர் மாலித் ஜெயதிலகா இதை தாக்கல் செய்தார். அதில், முக்கியமான சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன.

அவை வருமாறு:-

இலங்கையில் பர்தா உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். முக மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். மத, இன மோதல்களை உண்டாக்கும் பெயருடன் கூடிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். அத்தகைய அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சியாகவோ, மதம் சாராத அரசியல் கட்சியாகவோ மாற்றப்பட வேண்டும்.

மதரசாக்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும். அதுபோல், மதரசாக்களை ஒழுங்குபடுத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com