சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை; அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை விதித்ததற்கு அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை; அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்
Published on

ஜெனிவா,

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. இந்த போரின்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்துகிறது.

இந்ந நிலையில் இந்த விசாரணை நடத்துகிற அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவானது, சர்வதேச கோர்ட்டு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதை தடுக்கவும் வழிவகை செய்துள்ளது. இந்த உத்தரவை சர்வதேச கோர்ட்டு நிராகரித்துள்ளது. இந்த முடிவு, சட்டத்தின் ஆட்சியில் தலையிடுவதற்கான முயற்சி என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச கோர்ட்டின் விசாரணை அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு சுவிட்சர்லாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாரிகள் மீதான தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்காவை சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச கோர்ட்டின் விசாரணை அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மிகுந்த கவலை அளிக்கின்றன இந்த தடைகளை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com