ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி வெற்றி

ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி வெற்றிபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

ரஷியா 450 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 17-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.

அதிபர் புதினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷியா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.

அதோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சி முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படி இந்த தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷியா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதோடு மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷியா கட்சியின் மூதத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com