

ஹாங்காங்,
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகமூடி அணிந்தபடி போராட்டத்தில் பங்கேற்பதால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண இது தடையாக இருப்பதால் முகமூடிகள் அணிய தடை விதித்து அந்நாட்டு தலைவர் கேரி லாம் அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் முகமூடிகள் அணிய தடை விதித்ததை கண்டித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.