

பாரீஸ்,
பிரான்சில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நீண்ட நேர வகுப்புகள் போன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்சில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களும் வன்முறையாக மாறிய நிலையில், நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600-க்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்துள்ளனர்.வன்முறையை கட்டுப்படுத்த பாரிஸ் நகரின் முக்கிய சில இடங்கள் மற்றும் வடக்கு பிரான்சின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில், எதிர்வரும் வார இறுதியில் பல்வேறு அமைப்புகள் புதிய போராட்டங்களை அறிவித்து அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆனது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது
பிரான்சில் வரும் வார இறுதியில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் சனிக்கிழமை முதல் காவல்துறையினருக்கு உதவியாக ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்று உள்துறை மந்திரி லோரண்ட் நுனேஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, 'சென்டினெல்லே' என்ற சிறப்பு ராணுவப் படை வீரர்கள் முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். அதே நேரத்தில், காவல்துறையினரும் 'ஜெண்டார்ம்ஸ்' என்ற சிறப்புப் பாதுகாப்பு படையினரும் வன்முறை கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது போன்ற பணிகளில் முழு கவனம் செலுத்துவார்கள்.
மேலும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது இரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.