

இஸ்லாமாபாத்,
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை கொன்று அவர்களது உடல்களை சிதைத்துள்ளது. ஆனால், இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் சிதைக்கவில்லை என அந்நாடு கூறியது.
இந்த நிலையில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி, காட்டுமிராண்டித்தன செயலை பாகிஸ்தான் மறுத்துள்ளதில் நம்பகத்தன்மை இல்லை என கூறினார். இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை கொன்று அவர்களது உடல்களை சிதைக்கும் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்ல பாகிஸ்தான் உதவியுள்ளது என்றும் ஜெட்லி கூறினார்.
அவரது கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பு அதிகாரி நபீஸ் ஜகாரியா, இந்திய வீரர்கள் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் சிதைக்கவில்லை என்பதனை பாகிஸ்தான் தெளிவுப்படுத்தி விட்டது.
ஐ.நா. சபையின் முன்பு எந்த குற்றச்சாட்டுகளையும் கொண்டு செல்லும் உரிமையை இந்தியா இழந்து உள்ளது. ஏனெனில், ஐ.நா. சபையுடன் ஒருபொழுதும் இந்தியா இணைந்து செல்லவில்லை. இதற்காக நிறுவப்பட்டுள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவுடனும் இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படவில்லை என கூறியுள்ளார்.
அவர், இதுபோன்ற இந்தியாவின் தூண்டிவிடும் அறிக்கைகளால் பிராந்திய அமைதியில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியா தனது உள்நாட்டு அரசியலை சமாளிப்பதற்காக பாகிஸ்தான் நாட்டை எப்பொழுதும் பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரில் நடைபெறும் அராஜகங்களில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்பியும் வருகிறது என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1ந்தேதி காலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். சுமார் 8.30 மணியளவில் 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை தொடுத்தது.
பாகிஸ்தான் வீரர்கள் ராக்கெட்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த மற்ற வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச்சண்டை ஓய்ந்த பிறகு உயிரிழந்த 2 வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகளை இந்திய ராணுவம் தொடங்கியது. அப்போது அவர்களது தலையை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் துண்டித்து உடல்களை சிதைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.