மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக் கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மத விரோத கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தை செய்து, அது நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை விதிப்பது வழக்கம் ஆகும்.

இந்த நிலையில் ஜூனைத் ஹபீஸ் மத விரோத கருத்துகளை வெளியிட்ட வழக்கில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 13-ந்தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கு முல்தான் நகரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.

விசாரணை முடிந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய செசன்ஸ் நீதிபதி காசிப் கய்யாம், ஜூனைத் ஹபீசுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜூனைத் ஹபீஸ் வக்கீல் ஷாபாஸ் கோர்மானி கருத்து தெரிவிக்கையில், இந்த வழக்கில் ஜூனைத் ஹபீஸ் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என கூறினார்.

தற்போது ஜூனைத் ஹபீஸ், முல்தானில் அதிக பாதுகாப்பு அம்சங் களைக் கொண்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜூனைத் ஹபீசுக்காக முதலில் ஆஜராகி வாதாடிய வக்கீல் ரஷீத் ரகுமான் 2014-ம் ஆண்டு, மே மாதம் தனது அலுவலகத்தில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதும், இந்த வழக்கு விசாரணை காலத்தில் 9 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆசிப் சயீத் கோசாவுக்கு ஜூனைத் ஹபீஸ் பெற்றோர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கடிதம் எழுதினர். அதில் தங்கள் மகன் முல்தானில் தனிமைச்சிறையில் 6 ஆண்டுகாலமாக வாடிக்கொண்டிருப்பதாகவும், அவருக்கு நீதி வழங்கச்செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு, அப்துல் வாலிகான் பல்கலைக்கழக மாணவர் மாஷல் கான் என்பவர் சமூக வலைத்தளங்களில் மத விரோத கருத்துகளை வெளியிட்டதற்காக அடித்துக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com