

மாஸ்கோ,
ரஷியாவில் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட டூப் மனிதரை பயன்படுத்தி வருவதாகவும், பொதுநிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக அவரது டூப் பங்கேற்பதாகவும் பல ஆண்டுகளாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டூப் மனிதரை பயன்படுத்த தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதை ஒருபோதும்தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் புதின் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதின் அளித்த பேட்டியின்போது, தொகுப்பாளர் அவரிடம் ஆள்மாறாட்டம் தொடர்பாக இணையத்தில் பரவும் செய்தியை மேற்கோள் காட்டி நீங்கள் உண்மையான புதின் தானா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ஆம் நான்தான் புதின் என அவர் பதிலளித்தார். மேலும் 1999-2009 போரின் போது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடிய மிக கடினமான நேரத்தில் டூப் மனிதரை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறினார்.