'குவாட்' உச்சி மாநாடு ரத்து: பிரதமர் மோடி சிட்னிக்கு வருவதில் மாற்றமில்லை - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்

ஜோ பைடன் ஆஸ்திரேலியா பயணத்தை ஒத்தி வைத்ததால் அங்கு நடைபெற இருந்த குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
'குவாட்' உச்சி மாநாடு ரத்து: பிரதமர் மோடி சிட்னிக்கு வருவதில் மாற்றமில்லை - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்
Published on

மெல்போர்ன்,

பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்தது.

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெற இருந்த இந்த உச்சி மாநாட்டில் நமது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

உள்நாட்டு அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் இருப்பதால் அவரது ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. அதே சமயம் ஜப்பானில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறும் 'ஜி-7' உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோ பைடனின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற இருந்த குவாட் உச்சி மாநாட்டை ரத்து செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், "குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் சிட்னியில் நடைபெறாது. அதே சமயம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் 'ஜி-7' மாநட்டின் இடையே நாங்கள் (குவாட் தலைவர்கள்) விவாதத்தை நடத்துவோம்" என கூறினார்.

மேலும் அவர், "குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டாலும், இந்திய பிரதமர் மோடியும், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் அடுத்த வாரம் சிட்னிக்கு வருவதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. நிச்சயமாக பிரதமர் மோடி இங்கு (சிட்னி) மிகவும் வரவேற்கப்படுவார். அவருடன் இருதரப்பு சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com