

மணிலா,
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கியது குவாட் அமைப்பாகும். ஆசியான் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக குவாட் மாநாடு மணிலாவில் நாளை மாலை நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் டகாயிச்சி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட் டின் போது மோடியும், டிரம்பும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய 'குவாட்' தலைவர்களின் சந்திப்பு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி அமெரிக்காவில் உள்ள டெலாவேரில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையில் நடைபெற்றது.
குவாட் தலைவர்களின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஒலிவியா வேல்ஸ் கூறியதாவது:
நாளை மாலை மணிலா வில் 'குவாட்' தலைவர்களுடனான பலதரப்பு சந்திப்பில் அதிபர் பங்கேற்பார். இதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம்,பாதுகாப்பு தொடர்பான பொதுவான நலன்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
டிரம்ப்பின் தலைமையின் கீழ் 'குவாட்' அமைப்பு என்பது வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், செயல்பாட்டில் ஈடுபடும் ஒரு கூட்டமைப்பாக திகழ்கிறது. பிராந்தியத்தின் மிகக் கடினமான சவால்களை எதிர்கொள்வதோடு, சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குவாட் அமைப்பு 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டிரம்ப் பங்கேற்கும் முதல் குவாட் தலைவர்கள் சந்திப்பு இதுவாகும். அவரது 2-வது ஆண்டு பதவி காலத்தில் குவாட் நாடுகள் வெளியுறவு மந்திரிகள் இதுவரை 5 முறை சந்தித்து உள்ளார்.
குவாட் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு டிரம்ப் சீனா செல்கிறார். வருகிற 19-ந்தேதி சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்திக்கிறார்கள். உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து 3 தலைவர்களும் விவாதிப்பர்கள் பார்க்கப்படுகிறது.