அமீரகத்தில் மழை ஓய்ந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் 'துபாய்'

துபாயில் சாலைகள், குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Published on

துபாய்,

அமீரகத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் துபாய் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மேலும் சாலைகள், குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமீரகத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் கனமழை பெய்ய தொடங்கியது. 24 மணி நேரத்திற்கும் விடாமல் பெய்த மழை காரணமாக துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் அமீரகம் முழுவதும் நேற்று முன்தினம் மழை ஓய்ந்தது. தொடர்ந்து நேற்றும் துபாய் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் வெயில் அடித்து, தெளிவான வானிலையே காணப்பட்டது.

மேலும் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. அதேபோல துபாய், சார்ஜா பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசிப்பவர்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர். பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்ததன் காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

துபாய் மாநகராட்சி, சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகள் மழைவெள்ளத்தை வெளியேற்றி துபாய் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்தவர்களை வெளியேற்றவும், வீட்டிற்குள் சென்று அத்தியாவசிய பொருட்களை எடுக்கவும் மிதவைகள் மற்றும் தற்காலிக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் முடான், அரெபல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் காரணமாக பராமரிப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இங்கு படகுகள் மற்றும் மிதவைகள் மூலமாக அங்கிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அமீரகத்தில் மழை நின்றதாக ஏற்கனவே தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாத சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும் துபாய், சார்ஜா பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பஸ் போக்குவரத்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com