

காத்மண்டு,
இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
நேபாளத்தின் சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வருகிறது. நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதில் இருந்து நேபாளத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே விரிசல் எழுந்தது.
இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சீனாவின் ஆதரவு தங்களுக்கு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நேபாளம் கிளப்பியுள்ள பிரச்சினைக்கு சீனா ஒரு முக்கிய காரணியாக உளளது.
சமீபத்தில், காத்மண்டுவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒலி, இந்திய தூதரகம் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காத்மண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், நேபாள நாட்டில் இருந்து ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, உண்மையான அயோத்தியா நேபாளத்தில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை. ராமர் கடவுள் நேபாள நாட்டை சேர்ந்தவர். அவர் இந்தியர் அல்ல என பேசியுள்ளார் என்று தெரிவித்து உள்ளது. இது மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கடந்த மே மாதம் அவர் பேசும்பொழுது, சீனா, இத்தாலி வைரசை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.