ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு

கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை நேற்று முன் தினம் (ஜூன் 18) திறந்த ஈரான் இன்று மீண்டும் மூடியது.

ஹார்முஸ் நீரிணை
Published on

டெஹ்ரான்,

மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

லெபனான் மீதான தாக்குதலை தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்ததால் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இடையே நேற்று மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. நபாதியா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்களும் டிரோன்களும் தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் குடியிருப்பு கட்டிடங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டதாகவும் லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும் தெரிவித்து உள்ளது.

ஈரான் ராணுவம்

இந்தநிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் குற்றம்சாட்டி ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

உறுதிமொழிகளை மீறியதாகக் கூறப்படும் செயல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த மூடல் ஒரு "முதல் படி" என்றும், "தாக்குதல்" தொடர்ந்தால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும், ஹார்முஸ் நீரிணை 'மூடுவதும் திறப்பதுமாக' இருப்பதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலையற்ற சூழல் நீடிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com