அமெரிக்க கோர்ட்டில் ராணாவை நாடு கடத்தும் வழக்கில் இன்று நேரடி விசாரணை

அமெரிக்க கோர்ட்டில் ராணாவை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நேரடி விசாரணை நடக்கிறது.
அமெரிக்க கோர்ட்டில் ராணாவை நாடு கடத்தும் வழக்கில் இன்று நேரடி விசாரணை
Published on

வாஷிங்டன்,

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இதில் முக்கிய குற்றவாளியான டேவிட் கோல்மன் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் அப்ரூவராக மாறி, 35 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஹெட்லியின் நண்பரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவருமான தஹாவுர் ராணாவுக்கும் மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

ஆனால், நாடு கடத்துவதை எதிர்த்து ராணா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நிலுவையில் உள்ள அந்த வழக்கில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு மாஜிஸ்திரேட் ஜாக்குலின் சூல்ஜியான் முன்பு நேரடி விசாரணை தொடங்குகிறது. இதையொட்டி, மூடி சீல் வைக்கப்பட்ட இந்திய ஆவணங்களை அமெரிக்க அரசுத்தரப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com