

கொழும்பு,
இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் பதவியில் இருந்து விலகுவேன் என்று மத்திய வங்கியின் கவர்னர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து, இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அமைச்சரவையை நியமிப்பேன் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார். அதன்படி, இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மாலை பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் அதிபர் கோரியதாகவும், அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் பதவியை ஏற்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அதிபர் கோத்தபய ராஜபக்சவும் நேற்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதற்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அமைச்சரவை அரசியல் சாசன சீர்திருத்தங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது. அதனுடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.