”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” :லண்டனில் பிரதமர் மோடி பேச்சு

”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று கதுவா சம்பவம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PmModi #KathuaCase
”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” :லண்டனில் பிரதமர் மோடி பேச்சு
Published on

லண்டன்,

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது பிரதமர் மோடி, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கதுவா பாலியல் வன்கொடுமை பற்றியும் தனது கருத்தை முன்வைத்தார். பிரதமர் மோடி இது குறித்து கூறும் போது, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது...நாம் கடந்த கால அரசாங்கத்தின் போது நடைபெற்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது.

சமீப கால பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை அவமானப்பட வைக்கும் செயல் ஆகும். நமது நாட்டில் ஒவ்வொரு முறையும், பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை செய்யும் ஆணும் யாரோ ஒருவரின் மகன் தான். நமது மகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது கவலை அளிக்க கூடியது மட்டும் அல்லாமல் தேசத்துக்கே அவமானம் தரக்கூடியது என்றார்.

முன்னதாக, லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி எதிர்ப்பு தெரிவித்தனர். கதுவாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் இடம் பெற்று இருந்த பதாகைகளை ஏந்தியபடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கதுவா சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, நீதி கிடைக்கும் எனவும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி கடந்த வாரம் விளக்கம் அளித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com