

வாஷிங்டன்,
அரிய வகை ஆமை ஒன்று அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் முட்டையிட்டது. இது வரலாற்றிலே முதன்முறையாகும் என்பதால் விஞ்ஞானிகள் வியப்பில் உள்ளனர்.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில், அரிய வகை கடல் ஆமை ஆலிவ் ரிட்லி முட்டையிட்டுள்ளது. இந்த சம்பவம் விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெற்கு கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் உள்ள சீல் பீச் மற்றும் ஹண்டிங்டன் பீச் ஆகிய பகுதிகளில் இந்த அரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது.
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பொதுவாக இந்தியா, மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா போன்ற வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளின் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கில் கூட்டமாக முட்டையிடுகின்றன. ஆனால், அமெரிக்க மேற்கு கடற்கரையில் இதுபோன்று முட்டையிடுவது இதுவே முதல் முறையாகும்.
முட்டையிடப்பட்ட பகுதியை தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் உடனடியாக கண்டறிந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். முட்டைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டைகள் பொரிப்பதற்கு 45 முதல் 60 நாட்கள் வரை ஆகும் என்பதால், குஞ்சுகள் பாதுகாப்பாக கடலுக்குள் சென்றடையும் வரை இப்பகுதி தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு உலகளாவிய பருவநிலை மாற்றம் கடல்வாழ் உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.