

கொழும்பு,
கடலில் மீன்பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கும் ஆமைகளை மீனவர்கள் அடித்துத் துன்புறுத்தாமல், மிகுந்த கவனத்துடன் வலையை அவு்த்து கடலில் விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இலங்கை மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னர் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் வீசி சென்ற வலையில் அரியவகை சித்தாமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதையடுத்து வலையில் சிக்கிய அந்த அறியவகை கடல் ஆமையை, மீனவர்கள் பத்திரமாக மீண்டும் கடலில் உயிருடன் விட்டனர். கடலில் விட்ட சிறிது நேரத்தில் நீந்தி ஆழமான பகுதிக்கு ஆமை சென்றது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆமையை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. "கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கழிவு வலைகளை கடலில் வீசி செல்வதால் ஆமை, கடல் பசு, புள்ளி சுறா உள்ளிட்டவைகள் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பழைய வலைகளை கடலில் வீசுவதை தவிர்க்க வேண்டும்" என்று நாட்டுப்படகு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.