‘ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அமெரிக்க அதிபராக பதவியேற்க தயார்’ - ஜே.டி.வான்ஸ்

அதிபர் டொனால்டு டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
‘ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அமெரிக்க அதிபராக பதவியேற்க தயார்’ - ஜே.டி.வான்ஸ்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது 79 வயதாகும் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக டிரம்ப்பின் கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கடந்த ஜூலை மாதம் வெள்ளி மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்படும் லேசான தோல் எரிச்சல் பாதிப்பு டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், 41 வயதான ஜே.டி.வான்ஸ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிபர் டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார்.

ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிபராத பதவியேற்பதற்கு நான் தயாராக உள்ளேன். கடந்த 200 நாட்களில் எனது பணியின்போது எனக்கு கிடைத்த அனுபவங்களே மிகச்சிறந்த பயிற்சிகளாக அமைந்தன என்று தெரிவித்தார். அமெரிக்க வரலாற்றின் மிக இளம் வயதுடைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார். இவரது மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com