பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை - டொனால்டு டிரம்ப்


பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை - டொனால்டு டிரம்ப்
x

ஜூலை 9-ந்தேதியுடன் பரஸ்பர வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து பரஸ்பர வரியை விதித்தார். அதனை தொடர்ந்து, இந்த பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இதன்படி வரும் ஜூலை 9-ந்தேதியுடன் பரஸ்பர வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இந்த கால அவகாசம் முடிவதற்குள் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்திய வர்த்தக குழு ஒன்று வாஷிங்டனில் முகாமிட்டுள்ளது.

இந்த நிலையில், பரஸ்பர வரி விதிப்பை மேலும் சில காலத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதா? என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், "கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக, 'நீங்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கிறோம். நீங்கள் 20 சதவீதமோ, 40 சதவீதமோ அல்லது 50 சதவீதமோ வரி செலுத்த வேண்டியிருக்கும்' என்று சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story