ஆப்கான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால்....? - தலீபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடான போரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன. இந்த சூழலில் முடிவில்லாமால் நீண்டு கொண்டே சென்ற இந்த போரில் இருந்து விலக முடிவு செய்த அமெரிக்கா தலீபான்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

அந்த ஒப்பந்தத்தின்படி கடந்த மே மாத பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கின. ஜூலை மாத இறுதியில் 90 சதவீத படைகள் வெளியேறிய சூழலில் தலீபான்கள் நாட்டை ஆக்கிரமிக்க தொடங்கினர்.

அதை தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15ந்தேதி தலீபான்கள் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர். அதன்பின்னர் 20 ஆண்டுகால உள்நாட்டு போரில் தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்த தலீபான்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை அமைத்தனர். தலீபான்கள் தலைமையில் அமைந்துள்ள இந்த அரசை பெரும்பலான உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தியுள்ளன. அதே போல் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் கடனுதவியையும் சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க மறுப்பதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலீபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய தலீபான்கள் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாகித், ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்படாத நிலை தொடர்ந்தால், அது பிராந்தியதில் அமைதியற்ற நிலை ஏற்படுவதுடன் உலகிற்கு ஒரு பிரச்சனையாக மாறும். தலீபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான ராஜதந்திர உறவுகள் இல்லாததே. ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்குமாறு தலீபான் அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் தூதரக உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம், இதன் மூலம் நாங்கள் முறையான மற்றும் நல்ல உறவுகளை பராமரிக்க முடியும். அமெரிக்கா பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவது சாத்தியமல்ல. ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஆப்கான் ஆட்சியையும், ஆட்சி நடத்தும் தலீபான்கள் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். உலக நாடுகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தலீபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com