அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 13 பேர் பலி?

மத்திய தரைக்கடல் வழியாக படகில் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 13 பேர் பலி?
Published on

துனிஸ்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

13 பேர் பலி?

இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா. இந்நாட்டில் இருந்து 15 பேர் அகதிகளாக ஐரோப்பாவின் இத்தாலிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய தரைக்கடல் வழியாக படகில் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

படகு மத்திய தரைக்கடலில் துனியா கடல் எல்லையை தாண்டி பயணித்துள்ளது. அப்போது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 15 பேரும் கடலில் தத்தளித்தனர். இதில் பலரும் கடலில் மூழ்கினர். அப்போது அவ்வழியாக சென்ற மீன்பிடி படகில் இருந்தவர்கள் 2 அகதிகளை உயிருடன் மீட்டனர். எஞ்சிய 13 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமான 13 பேரையும் தேடும் பணியில் துனிசியா கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com