

டாகார்,
ஆப்பிரிக்க நாடுகளான செனகல், மாலி போன்றவற்றில் நிலவி வரும் வறுமை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் மூலம் ஆபத்தான கடல் வழிகளைப் பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்குள் நுழைய முயல்கின்றனர்.
இந்த நிலையில், செனகல் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள லூம்போல் மணல் திட்டுப் பகுதிக்கு அருகே, நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ரக தட்டையான மீன்பிடிப் படகு நடுக்கடலில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயங்கர அலைகளில் சிக்கி அந்தப் படகு தலை கீழாகக் கவிழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் தப்பிக்க வழியின்றி கடலில் மூழ்கினர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் செனகல் நாட்டு மீட்புப் படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், துரதிர்ஷ்ட வசமாக ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியான 39 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக செனகல் நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 30-க்கும் மேற்பட்ட படகுகளில் 3 ஆயிரத்து 300-க்கும் அதிகமான அகதிகள் ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்துள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பா செல்ல முயன்று 600-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கிரீஸ் நாட்டின் கிரீட் தீவுக்கு தெற்கே அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று நடுக்கடலில் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிரீஸ் நாட்டு கடலோர போலீசார், தண்ணீரில் தத்தளித்த 18 பேரை உயிருடன் மீட்டனர். இதேபோல், லிபியாவில் இருந்து கடல் வழியாக வந்த மேலும் 3 படகுகளில் இருந்த 180-க்கும் மேற்பட்ட அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.