சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.
சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்
Published on

சிறைகளில் விடுதலைப்புலிகள்

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது ஏராளமான விடுதலைப்புலிகள் பிடிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைதான் நீடித்து வருகிறது.

விடுதலை செய்ய நடவடிக்கை

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

இந்த 2 முக்கிய கோரிக்கைகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்வைக்கப்பட்டன.

சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்குதேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, மந்திரிசபை ஒப்புதல் அளித்து விடடது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. 20 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், நமது வர்த்தகத்தை, வரக்கூடிய உதவிகளை பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com