தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகள்

இரண்டு கல்லறைகளும் கி.மு.525க்கு முந்தைய சைட் வம்சத்தை சார்ந்தவை ஆகும். மம்மியின் வாயிலிருந்து வெளியே தள்ளிய நிலையில் அந்த தங்கத்திலான நாக்கு அமைந்துள்ளது.
image courtesy: dailymail.co.uk
image courtesy: dailymail.co.uk
Published on

கெய்ரோ,

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

14 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சிக் குழுவில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர்.

வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசில் உள்ள சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியில் தங்கத்தால் ஆன நாக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 கல்லறைகளின் உள்ளே புதைக்கப்பட்ட சடலங்களின் நாக்குகளை தங்க தகடுகளால் மாற்றி, பழங்கால எகிப்தியர்கள் நல்லடக்கம் செய்து உள்ளனர். இதன்மூலம், எகிப்தியர்களின் பாதாள உலக கடவுளாக கருதப்படும் ஓப்சிரிஸ் உடன் இறந்தவர்களின் ஆவி பேசுவதற்காக பழங்கால எகிப்தியர்கள் இந்த நடைமுறையை கையாண்டுள்ளனர்.

இவை இரண்டு கல்லறைகளும் கி.மு. 525க்கு முந்தைய சைட் வம்சத்தை சார்ந்தவை ஆகும். இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மம்மியின் வாயிலிருந்து வெளியே தள்ளிய நிலையில் அந்த தங்கத்திலான நாக்கு அமைந்துள்ளது.

ஒரு கல்லறையினுள், இறந்த அந்த ஆணின் உடல் மிக நன்றாக பாதுகாக்கப் பட்டு கல்லறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆணின் கல்லறைப்பெட்டியில் இருந்து 402 மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அத்துடன் சிறிய தாயத்துக்களின் தொகுப்பு மற்றும் பச்சை மணிகள் போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அதனுள் நகைகள், கல்லறை பொருட்களும் அதிக அளவில் கிடைக்கப்பட்டுள்ளது. இரண்டு உடல்களும் தனித்தனியாக இரு வேறு கல்லறைகளில் சுண்ணாம்பு கற்களால் ஆன அடித்தளத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தன.

ஆணின் கல்லறையில் பழங்கால எகிப்தியர்கள் புனிதமாகக் கருதிய வண்டு, ஜாடிகள் மற்றும் மண்பாண்டங்கள் உள்பட சில கலைப்பொருட்கள் இருந்தன.பெண்ணின் கல்லறையை திரிடர்கள் சேதப்படுத்தியதால் அதனுள் பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பாறையிலிருந்து வெட்டப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளின் உள்ளே இருக்கும் மம்மிகளில், இன்றளவும் மின்னிக் கொண்டிருக்கும் தங்க நாக்குகள் எலும்புக்கூடுகளின் வாயின் வெளியே கண்ணுக்கு தெரியும்படி உள்ளன.

மேலும், அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பழங்கால எகிப்திய தலமான டபோசிரிஸ் மாக்னா பகுதியில் இருந்து 16 மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் ஒன்றின் மண்டையோட்டில் இதே போன்ற தங்கத்திலான நாக்கு இருந்தது.

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம், கூடுதலாக 3 தங்க நாக்குகள் கல்லறையின் வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், அவை கி.மு. 30ம் காலகட்டத்தை சார்ந்தவை. எகிப்தில் ரோமானியர்காளின் ஆட்சிக்காலத்தின் போது உள்ளவை.

இது போன்ற தங்க நாக்குகள் அதிக அளவில் எகிப்திய மம்மிகளில் காணப்படும். கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்ட மம்மியில் இதே போன்ற தங்கத்தாலான நாக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com