இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது: டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேச்சு

பசுமை ஹைட்ரஜனின் மையமென இந்தியா திகழும் என மத்திய மந்திரி ஜோஷி பேசினார்.
டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேசும்போது, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல. அதுவே வளர்ச்சிக்கான இயந்திரம் என்பதே இந்தியாவின் செயல்பாட்டுக்கான திட்டம் ஆகும்.
அதனாலேயே இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது. இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இயக்கம், 2015-16 ஆண்டுகளில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் அது தீவிரமடைந்தது. இதனால், இந்தியாவில் ஒட்டுமொத்த மின்சார விலை குறைக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசமும் கூட நாங்கள் மின்சார விலையை குறைக்க போகிறோம் என தற்போது கூறி வருகின்றனர் என்றார். தொடர்ந்து அவர், பசுமை ஹைட்ரஜனின் மையமென வருங்காலத்தில் இந்தியா திகழும். இந்தியாவின் எரிசக்தி உற்பத்திக்கான மாடலை பற்றி அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.






