ஈரான் போரை நிறுத்த அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம்: டிரம்புக்கு கடும் பின்னடைவு

தீர்மானத்துக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 208 பேர் வாக்களித்தனர்.
டிரம்ப்
Published on

அமெரிக்காவில் 1973-ம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானச் சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்கள் வரை ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்60 நாட்களுக்கு பிறகு போரைத் தொடர, பாராளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் பெற வேண்டும். இல்லையென்றால் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

டிரம்ப் சட்டத்தை மீறுவதாக

ஈரான் மீதான போரை பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் டிரம்ப் தொடங்கிய நிலையில், 60 நாள் காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் டிரம்ப் சட்டத்தை மீறுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.இந்த நிலையில், ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

குடியரசுக் கட்சி

தீர்மானத்துக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 208 பேர் வாக்களித்தனர். இதனால் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது. வாக்கெடுப்பில் ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.டிரம்பின் போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் 4-வது முயற்சி இதுவாகும். இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக அமலுக்கு வர அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.ஆனால் செனட் சபை குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவேளை செனட் சபையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேறினாலும், இந்தத் தீர்மானத்தை டிரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தி நிராகரிக்கலாம்.

டிரம்பின் வீட்டோவை ரத்து செய்ய வேண்டுமென்றால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இதனால் உடனடியாக போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. இருந்தாலும், போரை நிறுத்தக் கோரும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது டிரம்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com