

பாரிஸ்,
பிரான்சில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். அந்நாட்டின் அதிபராக இம்மானுவேல் மெக்ரான் செயல்பட்டு வருகிறார். அந்நாட்டின் பிரதமராக செபஸ்டின் லிகார்னோ செயல்பட்டு வருகிறார். மெக்ரான் தலைமையிலான அரசு மையவாத அல்லது இடைநிலைவாத (centrist liberal) நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகும். பிரான்சில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே, பிரான்சில் கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. கல்வி நடைமுறையை மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்புகளில் அதிக மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமை, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை. நீண்ட நேர வகுப்புகள் உள்பட பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், கல்வி முறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள், அமைப்புகள் ஆதரவு அளித்தன. இந்த போராட்டம் பின்னர் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் பிரான்சில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோரும் கலந்துகொண்டனர்.
பிரான்சில் மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா உள்பட பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பலர் வசித்து வரும் நிலையில் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் கலந்துகொண்டனர். மேலும், பிரான்சில் வசித்து வரும் சட்டவிரோத அகதிகளும் இந்த போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரான்சில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மாணவர் அமைப்பினர், இடதுசாரி ஆதரவு அமைப்புகள், பொதுமக்கள், புலம்பெயர்ந்தோர் என பல்வேறு தரப்பினர் நடத்தி வரும் இந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்பட பல கடைகளை சூரையாடி வருகின்றனர். வணிக வளாகங்களில் இருந்து பட்டப்பகலில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
வன்முறை தலைநகர் பிரான்ஸ், மெர்சிலி, லியோன், லிமொகொஸ், லிலி, ரென்னிஸ், டொலோஸ், பர்டியக்ஸ், நெண்டிஸ், செயின் இடினி உள்பட பல்வேறு நகரங்களுக்கு பரவி வருகிறது. வன்முறையாளர்கள் பொதுச்சொத்துகள், தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லிலி நகரில் உள்ள ஐபோன் கடைக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த ஐபோன்களை திருடிச்சென்றனர்.
மேலும், அந்நாட்டின் அடையாளமாக திகழ்ந்த லிமொகொஸ் நகரில் உள்ள 140 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் வன்முறையாளர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, வன்முறை நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.