'பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' - ரிஷி சுனக் திட்டவட்டம்

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போட்டியில் உள்ள ரிஷி சுனக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ள நிலையில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பிரதமர் நாற்காலியைப் பிடிக்க இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ரிஷி சுனக் தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுப்பேசி உள்ளார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முற்றிலும் வீழ்த்தப்படுகிற வரையில் அவை தேசிய அவசர நிலையாகக்கருதப்படும். 2 பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மாலையில் நடைப்பயிற்சியும், இரவில் கடைகளுக்கும் சென்ற வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

* நான் இன்னும் அடுத்த நிலைக்கு செல்கிறேன். பெண்களின் அனுமதியின்றி அவர்களை அந்தரங்க படங்கள் எடுத்து துன்புறுத்தினால், அதைக் கிரிமினல் குற்றம் ஆக்கி, அந்த கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்களை வேட்டையாடுகிற ஆபத்தான குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருந்து நம்மைத் தடுக்க முடியாது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைக் பாதுகாப்பாகவும், பத்திரமாகமும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகிறவரையில் நான் ஓய மாட்டேன்.

* நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறுமிகளின் தொலைபேசி எண்களை சந்தேக நபர்கள் வைத்திருந்தால், எதற்காக அவர்கள் அந்த எண்கள், தொடர்பு விவரங்களை வைத்துள்ளனர் என்பதை விளக்கும்படி கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆபத்தான குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நீதித்துறை மந்திரிக்கு வழங்கப்படும்.

* மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு குற்றவாளிகள் தங்கள் மீதான நாடு கடத்தும் உத்தரவை ஏமாற்றுவதைத் தடுக்க உரிமைகள் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவேன். இவ்வாறு ரிஷி சுனக் கூறி உள்ளார்.

இது அவருக்கு பெண்கள் மத்தியில் புதிய ஆதரவு அலைகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com