

ரியாத்,
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான கேப்டன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தினர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ரியாத் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரியாத் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
முன்னதாக பதற்றமான சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.