ரோஹிங்யா நெருக்கடி: வங்காளதேசம் - மியான்மர் எல்லையில் அகதிகளுக்கு உதவும் சீக்கியர்கள்

வங்காளதேசம் - மியான்மர் எல்லையில் ரோஹிங்யா அகதிகளுக்கு சீக்கியர்கள் அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.
ரோஹிங்யா நெருக்கடி: வங்காளதேசம் - மியான்மர் எல்லையில் அகதிகளுக்கு உதவும் சீக்கியர்கள்
Published on

டாக்கா,

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் கடந்த மாதம் 25ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே தத்தளித்து வருகிற ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி வங்காளதேசம் வந்து உள்ளனர். வங்காளதேசம் எல்லை வந்து உள்ள ரோஹிங்யா அகதிகள் அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவ வசதியின்றியும் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர். வங்காளதேச அரசும் இவ்வளவு பெரிய அளவில் அகதிகளை ஏற்று பெரும் நெருக்கடியில் உள்ளது.

மியான்மரில் இருந்து வங்காள தேச எல்லைக்கு வரும் லட்சக்கணக்கான ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் வழங்கி இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் கால்சா என்ற சீக்கிய தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது.

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட தொண்டு நிறுவனம் வங்காளதேசத்தின் எல்லை நகரமான தேக்நாக் சென்று, உதவியை செய்து வருகிறது. தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமர்பிரீத் சிங் பேசுகையில், எளிதாக அங்கு நிலையை சொல்ல வேண்டும் என்றால் மிகவும் மோசமாக உள்ளது எனதான் கூற வேண்டும் என கூறிஉள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

நாங்கள் சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் வந்தோம், ஆனால் இங்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் உள்ளனர். அவர்கள் தண்ணீர், உணவு, ஆடைகள் மற்றும் தங்குமிடம் இல்லாமல் வசிக்கிறார்கள். அவர்கள் எங்கு இடம் கிடைக்கிறதோ, அங்கு இருக்கிறார்கள். மழை பெய்தாலும் அவர்களுக்கு வேறு இடம் செல்ல இடம் கிடையாது.

அவர்களுக்கு நாங்கள் நீண்ட நாள் தங்கும் வசதியான இருப்பிடம் மற்றும் உணவை வழங்குவோம். நாங்கள் தார்ப்பாய்கள் ஏற்பாடு செய்து உள்ளோம், ஆனால் எங்களுடைய தயார் நிலைக்கு அதிகமாக அகதிகள் உள்ளனர். அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற சிறிது கூடுதல் கால அவகாசம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர் அமர்பிரீத் சிங். மழை காரணமாக அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கால தாமதமும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அமர்பிரீத் சிங் பேசுகையில்,

பிரச்சனையானது முடியாத வரையில் நாங்கள் அகதிகளுக்கு உணவு வழங்கும் பணியில் எங்களை அர்ப்பணித்து உள்ளோம்.

யாரும் உணவின்றி பசியோடு இரவு தூங்க செல்லக்கூடாது என்பதற்கே எங்களுடைய முன்னுரிமையாகும், சிறார்கள் ஆடையின்றி சுற்றி வருகிறார்கள், உணவிற்கா பிச்சையெடுக்கிறார்கள். முகாம்களில் இடம் கிடைக்காதவர்கள், யாராவது உணவு கொடுப்பார்கள் என சாலை ஓரங்களில் இருக்கிறார்கள், என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com