அமெரிக்காவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

அமெரிக்காவை தொடர்ந்து தங்கள் வான்பரப்பிலும் மர்ம பலூன் தென்பட்டதாக ருமேனியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்
Published on

புக்கரெஸ்ட்,

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டின் வான்பரப்பில் அடுத்தடுத்து 2 மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டன. அதேபோல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்பரப்பில் மர்ம பலூன் பறந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளியில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை ரேடார் அமைப்பு கண்டறிந்தது. அதனை தொடர்ந்து உடனடியாக 2 போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் விமானங்கள் சென்றபோது அந்த இடத்தில் மர்ம பலூன் எதுவும் இல்லை. ரேடாரில் இருந்தும் அது மறைந்துவிட்டது. எனவே ருமேனிய வான்வெளிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என கூறப்பட்டது.

அதேபோல் ருமேனியாவின் அண்டை நாடான மால்டோவாவும் தங்கள் வான்பரப்பில் மர்ம பலூன் தென்பட்டதாக தெரிவித்தது. அதுமட்டும் இன்றி வானில் மர்ம பலூன் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்டோவா தனது வான்வெளி முழுவதையும் தற்காலிகமாக மூடியது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக இயக்கப்பட்டன. பல விமானங்கள் ருமேனியாவுக்கு மாற்றிவிடப்பட்டன.

இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த மர்ம பலூன்கள் எங்கிருந்து வந்தன என்று இரு நாடுகளும் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com