ஜெர்மனி கால்பந்து அணி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்கு ரூ.29 லட்சம் நிதி

கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்காக சுமார் 29 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனி கால்பந்து அணி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்கு ரூ.29 லட்சம் நிதி
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 29 ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது. பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர்.

இதில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. நாக்-அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது 1966-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.

இந்த நிலையில் போட்டியை நேரில் காண வந்த ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஜென்மன் அணி தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது ஸ்டேடியத்தில் உள்ள திரைகளிலும் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் இணையத்தில் அதனை கிண்டல் செய்து பதிவிட்டனர்.

இணையத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவிய நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட தொடங்கினர். இதனால் இணையத்தில் கருத்து மோதல்கள் உருவானது. இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்பவர் 50,000 பவுண்டுகளை இலக்காக வைத்து ஆன்லைனில் நிதி திரட்டி ஆரம்பித்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அந்த சிறுமிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் தற்போது வரை அந்த சிறுமிக்காக 28,500 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 29 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து ஜோயல் ஹுயுக்ஸ் கூறுகையில், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்று அந்த சிறுமி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com