ரூ.626 கோடி மோசடி வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு திடீர் நெருக்கடி

ரூ.626 கோடி மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது.
ரூ.626 கோடி மோசடி வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு திடீர் நெருக்கடி
Published on

இஸ்லாமாபாத், 

பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவரின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.

முன்னதாக ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2008-2018 வரை பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

ரூ.626 கோடி கையாடல்

முந்தைய இம்ரான்கான் ஆட்சியின் போது ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் 2008-2018 இடையிலான காலக்கட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து ரூ.626 கோடி கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

முன்ஜாமீன் பெற்றனர்

இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாஸ் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கைது நடவடிக்கையை தவிர்க்க கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த சூழலில்தான் அண்மையில் ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அதேபோல் அவரது மகன் ஹம்சா ஷபாசும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பெறுப்பேற்றார். இருப்பினும் அவர்கள் இருவர் மீதான பண மேசாடி வழக்கை புலனாய்வு அமைப்பு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

கைது செய்ய வேண்டும்

இந்த நிலையில் இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

விசாரணையின்போது, புலனாய்வு அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கில் இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு வக்கீல் புலனாய்வு அமைப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரித்து வருகிறபோதும், ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாசுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே அவர்களை கைது செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com