கொச்சியில் இருந்து இயக்கப்படும்: இந்தியா - மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
கொச்சியில் இருந்து இயக்கப்படும்: இந்தியா - மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Published on

மாலி,

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மாலத்தீவுக்கு, இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடந்து வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த நாட்டுக்கு படகு போக்குவரத்தையும் தொடங்க இருநாடுகளும் திட்டமிட்டன.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் இப்ராகிம் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-மாலத்தீவு இடையே படகு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இந்த திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான படகு போக்குவரத்தை விரைவில் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளை இரு தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இந்த திட்டத்தின்படி கொச்சியில் இருந்து குல்குதுபசி வழியாக தினந்தோறும் படகு மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடத்தப்படும். இந்த சேவை தினந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டம் குறித்து மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் மோடி பேசினார். இரு நாடுகளுக்கு இடையே படகு போக்குவரத்து தொடங்குவதால் தனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

இதைப்போல மாலத்தீவில் உள்ள பழமையான மசூதியான குகுரு மிஸ்கியை பாதுகாக்கும் பணிகளிலும் இந்தியா சிறப்பான பங்களிப்பை வழங்கும் என பிரதமர் கூறினார். பவளக்கற்களால் அமைக்கப்பட்ட இதுபோன்ற மசூதி, உலகில் வேறு எங்கிலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com