

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 51-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள்
ஏப்ரல்15, 7.00 PM
ரஷ்ய தாக்குதலால் பிப்ரவரி 24 முதல் இதுவரை உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர் - ஐ.நா
ஏப்ரல்15, 3.00 PM
ரஷியாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. இந்த நிலையில், உக்ரைனுக்கு பதிலடியாக அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கீவ் நகரத்திற்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலை மீது கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் ரஷிய படைகள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல்15, 1.00 PM
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் நேற்று இரவு முழுவதும் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 15, 10.00 AM
உக்ரைனில் 4 வாரங்களாக 300 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு
உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே ஒரு பள்ளியின் அடித்தளத்தில் 300 பேர் 4 வாரங்களாக ரஷிய படைகளால் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை உக்ரைன் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், யாஹிட்னே என்ற இடத்தில் கிராம மக்களை ரஷிய துருப்புகள் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர். 18 பேர் ரஷிய ஆக்கிரமிப்பின்போது கொல்லப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15, 8.00 AM
உக்ரைனுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளை அனுப்புவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15, 6.00 AM
உக்ரைன் போரால் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்திக்கிறது - ஐ.நா
உக்ரைன் போர் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் உணவு நெருக்கடியை ஆழமாக்குகிறது ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா, சூடான், தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய ஏழு ஹாட்ஸ்பாட்களுக்கு அதன் அவசரகால நிதியிலிருந்து $100 மில்லியன் வழங்குவதாக ஐநா அறிவித்துள்ளது.