ரஷ்யாவில் தொடர்ந்து உயரும் கொரோனா: புதிதாக 40,993 பேருக்கு தொற்று!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,158 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.72 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 50.12 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல், ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 85,13,790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,158 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 73,58,539 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,16,713 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் பல மாதங்களாக ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுவரை குறைவான சதவிகித மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாக அரசுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com