உக்ரைனில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷியா

உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி தொடக்கம் முதல் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது.
உக்ரைனில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷியா
Published on

மாஸ்கோ,

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.அதனை பொருட்படுத்தாமல் உக்ரைன் இணைய முயன்றதால் 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவியை வழங்கின. எனினும் உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி தொடக்கம் முதல் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது.எனவே போரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். அதன்பிறகு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், போரை நிறுத்தாவிட்டால் ரஷியா மீதான பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார். அதன்படி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு உக்ரைன் வலியுறுத்தியது. ஆனால் ரஷிய அதிபர் புதின் அதனை நிராகரித்தார்.

ஏற்கனவே உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள யப்லுனிவ்கா கிராமத்தை கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com