ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு - உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு!

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.
Image Credit:www.themoscowtimes.com
Image Credit:www.themoscowtimes.com
Published on

மாஸ்கோ,

ரஷியாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது.

இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்தனர்.

இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர் மற்றும் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில், ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீதும் தீப்பொறி பறந்து பற்றி கொண்டது.ரெயிலின் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் தீப்பிடித்து கொண்டன.இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷியாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். எனினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறுகையில், "சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்" என்று டுவீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com