கிரீமியா பகுதியில் உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா

கிரீமியா பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலை ரஷிய ராணுவம் முறியடித்தது.
கிரீமியா பகுதியில் உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா
Published on

பொருளாதார உதவி

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயற்சி செய்ததால் உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. போர் தொடங்கி 17 மாதங்கள் ஆகியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இரு தரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரில் உக்ரைன் முதலில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவ முன்வந்தன. அந்த நாடுகளின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகள் மூலம் பலம் வாய்ந்த ரஷியாவை உக்ரைன் இன்னும் சமாளித்து வருகிறது.

உளவு பார்ப்பதற்காக...

தொடக்கத்தில் ஏவுகணை, போர் விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்த போர் தற்போது டிரோன் தாக்குதல் வரை சென்றுள்ளது. இந்த டிரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது எதிரி நாடுகளை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால் குறைவான செலவு, ராணுவ வீரர்களின் உயிரிழப்பு இல்லாதது போன்ற காரணங்களால் தற்போது டிரோன் தாக்குதல் பரவலாக நடைபெறுகிறது. இதனால் நேரடி தாக்குதல் என்பது அரிதாகவே உள்ளது.

20 டிரோன் தாக்குதல்

அந்த வகையில் உக்ரைனும், ரஷியாவும் அடிக்கடி டிரோன் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி பின்னர் தங்களது இலக்கை அடைந்ததும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்கின்றனர். இதனால் குறைந்த செலவில் பெரும்பகுதிகளை அழிக்க முடிகிறது.

இந்தநிலையில் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் 20 டிரோன்களையும் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com