

கீவ்,
உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
எனினும், போரானது தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷிய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) உயிரிழந்து உள்ளார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.