

பிரஸ்சல்ஸ்,
ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடந்த ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்றார். இதில் இருந்து மீண்டு வந்த அவரை கடந்த ஜனவரி மாதம் பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ரஷிய அரசுக்கு எதிராக நிற்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு, அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சனம் செய்து வருகிறது. மேலும் இது தொடர்பாக ரஷியா மீது ஐரோப்பிய கூட்டமைப்பு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனித உரிமைக்கான உயரிய விருதான சாகரோவ் விருது, இந்த ஆண்டு அலெக்சி நவால்னிக்கு வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அலெக்சி நவால்னியின் சார்பில் அவரது மகள் டாரியா நவால்னயா இந்த விருதை பெற்றுக்கொண்டார். அப்போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலிகளை எழுப்பி கவுரவப்படுத்தினர். அதன் பின்னர் டாரியா நவால்னயா தனது தந்தையின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு உரையாற்றினார்.