ரஷிய அதிபர்... பெயர் மறந்து போச்சே... பைடனை கலாய்த்து காமெடி நிகழ்ச்சி

சவுதி அரேபிய சேனலில் அமெரிக்க ஜனாதிபதி பைடனை கலாய்த்து வெளியான காமெடி நிகழ்ச்சி வைரலாகி வருகிறது.
ரஷிய அதிபர்... பெயர் மறந்து போச்சே... பைடனை கலாய்த்து காமெடி நிகழ்ச்சி
Published on

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் உயர கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் நெருக்கடி பற்றி பேசுவதற்காக சவுதி இளவரசருக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், அதனை அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் புறக்கணித்து விட்டார். பைடன் பதவியேற்ற பின்பு, ஒரு முறை கூட இளவரசர் முகமதுவிடம் பேசாத நிலையில், தன்னை பற்றி பைடன் என்ன நினைக்கிறார் என்ற கவலை தனக்கில்லை என்று பேட்டியொன்றில் இளவரசர் கூறினார்.

இந்த நிலையில், சவுதி அரேபியா பெருமளவு பங்குகளை கொண்டுள்ள எம்.பி.சி. சேனலில் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. அதில், பைடன் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேசி கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த காமெடி நிகழ்ச்சியில், பைடன் சோம்பேறியாகவும், ஞாபக மறதி உள்ளவராகவும் காட்டப்பட்டு உள்ளார். அவரால் ரஷிய அதிபரின் பெயரை கூட நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை. அதனுடன் இல்லாமல், கமலா ஹாரிசை தி பர்ஸ்ட் லேடி என குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியையே தி பர்ஸ்ட் லேடி என குறிப்பிடுவது வழக்கம்.

இதுபற்றி வெளியான வீடியோவில், பைடன் கதாபாத்திரம் ஏற்றவர் மேடைக்கு பேசுவதற்காக வருகிறார். அவர் பேசும்போது, இன்று ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பற்றி நாம் பேச இருக்கிறோம் என தொடங்குகிறார்.

அவரது பேச்சில் கமலா ஹாரிஸ் குறுக்கிட்டு, திருத்தம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். இதன்பின் சரி செய்து கொண்ட பைடன், இன்று ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பற்றி நாம் பேச இருக்கிறோம் என மீண்டும் தவறாக பேசுகிறார். இறுதியில் ஒருவழியாக, ரஷியா என பெயரை சரியாக குறிப்பிடுகிறார்.

ஆனால், ரஷிய அதிபரின் பெயர் அவருக்கு மறந்து விடுகிறது. அதனை கமலாவிடம் கேட்கிறார். அதற்கு அவர், புதின் என கூறுகிறார். இதன்பின்னர், புதின் நன்றாக என்னை கவனியுங்கள். உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்ல போகிறேன். அந்த செய்தி... என கூறி கொண்டிருக்கும்போதே பைடன் தூங்கி விடுகிறார்.

இதனை கவனித்த கமலா, அவரை தட்டியெழுப்புகிறார். விழித்து கொண்ட பைடன், விளாடிமிர் புதினை முற்றிலும் மறந்து விட்டு, சீன அதிபர் என தனது பேச்சை ஆரம்பிக்கிறார். அதனை கமலா சரி செய்கிறார். அதற்கு பைடன், நன்றி பர்ஸ்ட் லேடி என கூறுகிறார். பின் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார். அவரை கமலா பின்னால் இருந்து தாங்கி பிடித்து கொள்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையாகி உள்ளது. இதனால், அமெரிக்கா, சவுதி அரேபியா இடையிலான உறவில் கூடுதல் விரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com